
இந்த வருடம் காலநிலை மாற்றத்தால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் டெங்கு காய்ச்சல் பாதிப்பு வேகமாக பரவி வருவதாக பொது சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு அரசு சார்பில் மாநிலம் முழுவதும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. பருவ மாற்ற காலங்களில் பெய்யும் மழையால் ஆங்காங்கே தேங்கும் நீரில் ஏடிஎஸ் வகை கொசுக்கள் அதிகளவில் உற்பத்தி ஆகின்றன. பகல் நேரத்தில் கடிக்கும் இந்த வகை கொசுக்கள் தான் டெங்கு காய்ச்சல் பரவுவதற்கு முக்கிய காரணம்.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளதால் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடந்த 10 நாட்களில் 1026 பேர் டெங்குவாலும், 137 பேர் சிக்கன் குனியாவாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் தாக்கம் தமிழகத்தில் பரவாமல் தடுக்கும் வகையில் எல்லையோர மாவட்டங்களில் சுகாதாரத்துறை சார்பாக தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.