கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக இன்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் பரபரப்பு நிலவியது. அவ்வேளையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியபோது, “கரூர் பரப்புரைக்காக தி.வெ.க. சார்பில் அறிவிக்கப்பட்ட நேரத்தைவிட 7 மணிநேரம் தாமதமாக கட்சித் தலைவர் வந்தது கூட்ட நெரிசலுக்கு காரணம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கிய ஏற்பாடுகளை செய்ய தவறினர்,” என்றார்.
இதற்கிடையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி எழுந்து, “அசம்பாவிதம் ஏற்பட்டது அரசின் அலட்சியத்தினால்தான். முழுமையான பாதுகாப்பு கொடுத்திருந்தால் இத்தகைய துயர சம்பவம் நடந்திருக்காது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க தவறியுள்ளது,” என குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், சில குறிப்புகளை பதிவில் இருந்து நீக்குமாறும் கோரினார். இதையடுத்து ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினர் இடையே காரசார விவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சபாநாயகரை கண்டித்து கோஷங்கள் எழுப்பிய அவர்கள் பின்னர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். இதனைத் தொடர்ந்து சட்டசபை வளாகத்தில் கடும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சட்டசபை வெளிநடப்புக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “எங்களுக்கு அவையில் பேச அனுமதி அளிக்கப்படவில்லை. கரூர் சம்பவத்தில் மர்மம் உள்ளது. நாங்கள் மக்களுக்காகவே பேசுகிறோம், அரசியல் செய்யவில்லை,” என்றார். அவர் மேலும், “கரூர் கூட்டத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்காததே 41 உயிரிழப்புக்குக் காரணம். இதற்கு அரசின் அலட்சியமே காரணம். எங்கள் கட்சிக்கு அனுமதி மறுத்த இடத்தில் தி.வெ.க.க்கு அனுமதி வழங்கப்பட்டது. இது திட்டமிட்ட செயல். சி.பி.ஐ. விசாரணை கோரியுள்ளோம்; அதற்கு அரசு ஏன் பயப்படுகிறது?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் “பிரேத பரிசோதனையில் அவசரம் காட்டியதும் சந்தேகத்திற்குரியது. உண்மையை மறைக்கும் முயற்சி நடைபெறுகிறது,” எனவும் அவர் தெரிவித்தார்.
