
விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நேற்று விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி வி சாலையில் நடந்து முடிந்தது. மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் விஜய் என்னவெல்லாம் பேசப்போகிறார் என எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தனர். அப்போது விஜய் தனது எழுச்சிமிக்க பேச்சால் ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது அரசியல் கொள்கைகள் கோட்பாடுகள், மக்கள் நலன் என அனைத்தைப் பற்றியும் விளக்கமாக பேசினார்.
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாவது, விஜய்க்கு கிடைத்த வீச்சும் வீச்சும் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஒரு அரசியல் கட்சி வருகிறது என்றால் அது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். விஜயின் வீச்சும், ரீச்சும் அதிகம். நாங்கள் வரும்போது எங்களுக்கு இந்த அளவு வரவேற்பு இல்லை. நாங்கள் எளிமையானவர்கள். தமிழர்கள் நாங்கள் இப்போதும் அனாதையாக தான் நிற்கிறோம். வேலு நாச்சியார் அம்பேத்கர் புகைப்படங்களை வைப்பது பெரியதல்ல.
அவர்களின் கருத்துக்களை கொண்டு மக்களிடம் சேர்க்க வேண்டும். கட்டவுட் அல்ல கருத்தியல் தான். அரசியலில் நான் வந்து பேசவில்லை என்றால் சுந்தரலிங்கனார் வேலுநாச்சியார் இவர்களை பற்றி எல்லாம் அடுத்த தலைமுறைக்கு தெரிந்திருக்குமா என்பது கூட தெரியவில்லை. விஜய் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது திராவிடமும் தமிழ் தேசியமும் ஒன்று என தம்பி விஜய் சொல்வது எங்கள் கொள்கைக்கு எதிரானது. தமிழ் தேசியமும் திராவிடமும் ஒன்றல்ல. இரண்டும் வெவ்வேறானது சாம்பார் என்ன சொல்ல வேண்டும் இல்லையென்றால் கருவாட்டு குழம்பு என்று சொல்ல வேண்டும். கருவாட்டு சாம்பார் என்று சொல்ல முடியாது என பேசியுள்ளார்.