மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அரசியல்வாதியான பாபா சித்திக் என்பவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலால் சமீபத்தில் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் இதுவரை 3 பேரை கைது செய்துள்ள நிலையில் சிறையில் இருந்து கொண்டே லாரன்ஸ் பிஷ்னோய் கொலைக்கு திட்டம் தீட்டியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. இந்த கும்பல் பல வருடங்களாக பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகிறது. அவர்கள் சல்மான் கானுக்கு யார் உதவி செய்தாலும் பாபா சித்திக் நிலைமைதான் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

இதனால் சல்மான் கானுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 1998 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்திற்கு சல்மான் கான் ஷூட்டிங் சென்றபோது அவர் கரும்புலி வகை மான்களை வேட்டையாடினார். அவர்கள் அந்த மான் வகையை புனித விலங்காக கருதும் நிலையில் அதிலிருந்து தான் சல்மான் கானை கொலை செய்ய திட்டம் தீட்டி வருகின்றனர். இந்நிலையில் பாஜக கட்சியின் எம்.பி ஹர்நாத் சிங் யாதவ் தற்போது நடிகர் சல்மான் கானை பிஷ்னோய் சமுதாய மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும் போது, கரும்புலி மானை பிஷ்னோய் சமூகத்தினர் கடவுளாக வணங்குகிறார்கள். அதை நீங்கள் வேட்டையாடியது மட்டுமின்றி சமைத்தும் சாப்பிட்டு உள்ளீர்கள். இதனால் அந்த சமுதாயத்தை சேர்ந்தவர்கள் உங்கள் மீது கோபத்தில் இருக்கிறார்கள். எனவே நீங்கள் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். மேலும் முன்னதாக பீகாரைச் சேர்ந்த பாஜக எம்பி ஒருவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலை 24 மணி நேரத்தில் ஒட்டுமொத்தமாக அழித்து விடுவேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.