இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனைகளான நட் சிவர்-ப்ரெண்ட் மற்றும் கேத்தரின் தங்கள் முதல் குழந்தையை அண்மையில் வரவேற்றுள்ளனர். 2022ஆம் ஆண்டில் திருமணம் செய்து கொண்ட இந்த தன்பாலின ஜோடி, பெற்றோர் ஆகும் கனவை நிறைவேற்ற 2024ஆம் ஆண்டின் தொடக்கத்தில் “எக் ஃப்ரீஸிங்” (Egg-Freezing) முறையை பயன்படுத்தி குழந்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்படி, கேத்தரின் தற்போது ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். 2023ஆம் ஆண்டு கேத்தரின் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டாலும், நட் சிவர் தொடர்ந்து ஆட்டங்களில் பங்கேற்று வருகிறார்.

தங்கள் குழந்தையை கட்டியணைத்த புகைப்படங்களை நட் சிவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளதுடன், அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த இனிய தருணத்தில், உலகம் முழுவதிலுள்ள ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

32 வயதான நட் சிவர், தற்போது உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளில் ஒருவராக கருதப்படுகிறார். ஐசிசி (ICC) அவரை பலமுறை சிறந்த வீராங்கனையாக அறிவித்துள்ளது. தற்போது, அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்காக நட் சிவர் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார்