நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே பரிகார பூஜை செய்வதாக கூறி, ஒரு இளைஞரை மண்டியிட வைத்து, கத்தியால் நெற்றியில் குத்திய சாமியார் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குன்னூர் அருகே தூதர் மட்டம் மகாலிங்கம் காலனி பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தனது வீட்டில் சிலை வைத்து சாமியாராக நடித்து, பொதுமக்களுக்கு குறி சொல்லி வந்தார். அந்த பகுதியில் வசிக்கும் நாகராஜ் என்பவர் கட்டிட தொழிலாளராகவும், விவசாயத்திலும் ஈடுபட்டு வருகிறார். இவர், சாமியாரான சிவகுமாருக்கு அவ்வப்போது உதவிகள் செய்து வந்துள்ளார்.

சமீபத்தில், நாகராஜ் வீட்டிற்கு வெளியே சென்றுவிட்டு வந்தபோது, சிவகுமார், “உனக்கு மனநிலை சரியில்லை என மக்கள் பேசுகிறார்கள்; அதற்காக ஒரு பரிகார பூஜை செய்கிறேன்” என கூறி, நாகராஜுக்கு மது வாங்கிக் கொடுத்து, தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பூஜை செய்வதாகக் கூறி திருநீர் மற்றும் குங்குமம் வீசிய பின், திடீரென கத்தியை எடுத்து நாகராஜின் நெற்றியில் குத்தினார்.

இக்கொடிய தாக்குதலில் காயமடைந்த நாகராஜ் அலறி ஓடி வெளியே வந்து உள்ளூர் மக்களிடம் உதவி கேட்டார். உடனடியாக அவர் 108 ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு செய்யப்பட்டு, தற்போது சிகிச்சையில் உள்ளார்.

இதுகுறித்து கொழகம்பை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், உதவி ஆய்வாளர் இளையராஜா தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சாமியார் சிவகுமாரை கைது செய்து, அவர்மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இச்சம்பவம், “பூஜை” என்ற பெயரில் மக்கள் நம்பிக்கையை துஷ்பிரயோகம் செய்யும் சிலரைப் பற்றிய கவலையை அதிகரிக்கிறது. போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.