சேலத்தில் அதிமுக நிர்வாகிகள் அக்கட்சியின் நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் மற்றும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் சிலைகளுக்கு முன்பு அமர்ந்து, திடீரெனக் கண்ணீர் விட்டு அழுது தியானத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாகத் தலைவர்களின் சிலைகளுக்கு மாங்கனிகளைப் படைத்து, மலர் தூவி மரியாதை செய்த நிர்வாகிகள், பின்னர் சிலையின் முன்பாகவே தரையில் அமர்ந்து நீண்ட நேரம் தியானம் செய்தனர். அப்போது கட்சிப் பிளவுகள் மற்றும் அரசியல் சூழல்களை நினைத்து அவர்கள் உணர்ச்சிவசப்பட்டுக் கண்ணீர் சிந்தியது பார்ப்பவர்களை நெகிழச் செய்தது.
சேலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலை முன்பு அமர்ந்து தியானத்தில் கண்ணீர் விட்டு அழுத அதிமுக நிர்வாகிகள்…#salem #admk #cryprayers pic.twitter.com/xkboydFoZE
— Thanthi TV (@ThanthiTV) May 12, 2026
இந்த நூதன தியானம் மற்றும் நிர்வாகிகள் கண்ணீர் விடும் காட்சிகள் தற்போது எக்ஸ் (X) உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவி வருகிறது. “கட்சி மீண்டும் பழைய பலத்துடன் ஒன்று சேர வேண்டும்” என்ற வேண்டுதலுடன் அவர்கள் இந்த தியானத்தில் ஈடுபட்டதாகத் தொண்டர்கள் மத்தியில் பேசப்படுகிறது. சேலம் மாநகரின் மையப்பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், அதிமுக தொண்டர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதோடு, அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
