நாளை நடைபெறவுள்ள நம்பிக்கை கோரும் தீர்மானத்தில், தமிழக வெற்றிக் கழக அரசுக்கு எதிராக வாக்களிக்கப் போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார். எடப்பாடியாரின் இந்த நேரடி ஆணையின்படி, அனைத்து அதிமுக எம்.எல்.ஏ-க்களும் தவெக-வுக்கு எதிராகவே வாக்களிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தவெக அரசின் மீது கொண்டுவரப்படும் இந்தத் தீர்மானத்தில் அதிமுகவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்ற கேள்விக்கு, இந்த உத்தரவின் மூலம் இபிஎஸ் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
மேலும், கட்சியின் முடிவை மீறி தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களிக்கும் எம்.எல்.ஏ-க்கள் மீது கடுமையான சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் எடப்பாடி தரப்பு எச்சரித்துள்ளது. “விப்” உத்தரவை மீறுபவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இது குறித்த தகவல் ஏற்கனவே முறைப்படி தெரிவிக்கப்பட்டுவிட்டதால், நாளைய வாக்கெடுப்பு தமிழக அரசியலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
