நியூசிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஹர்திக் பாண்டியா தனது ஃபாலோ-த்ரூவில் ஒரு ஆச்சரியமான கேட்சை பிடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

ஹைதராபாத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் 2வது ஒருநாள் போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், டாம் லேதம் தலைமையிலான நியூசிலாந்து அணியும் சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் நேற்று (சனிக்கிழமை) மோதியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்து வீச முடிவு செய்தார்.  அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி இந்திய பந்துவீச்சாளர்களை சமாளிக்க முடியாமல் 34.3 ஓவரில் 108 ரன்களுக்கு சுருண்டது. நியூசிலாந்து அணியில் பிலிப்ஸ் 36 ரன்களும், சான்ட்னர் 27 ரன்களும் எடுத்தனர்.

இந்திய அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய முகமது ஷமி 3 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா மற்றும் வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டுகளும், முகமது சிராஜ் , ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில் கேப்டன் ரோஹித சர்மா (51) மற்றும் சுப்மன் கில் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20.1 ஓவரில் 2 விக்கெட் இழந்து  111 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதனால் நியூசிலாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி 2:0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்ச்சை சமாளிக்க முடியாமல் நியூசிலாந்து அணி 56 ரன்களுக்குள்  6 விக்கெட்டுகளை இழந்தது. இந்திய பந்துவீச்சாளர்களின் ஆதிக்கத்துக்கு மத்தியில் ஹர்திக் பாண்டியா அதிக கவனத்தை ஈர்த்தார். ஹர்திக் பாண்டியா தனது ஃபாலோ த்ரூவில் டெவோன் கான்வேயின் அசத்தலான கேட்சை எடுத்து கிரிக்கெட் உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

இன்னிங்ஸின் 10வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசிக்கொண்டிருந்தார். அதில், 4வது பந்தை அவர் குட் லெந்த் பகுதியில் ஆஃப் மற்றும் மிடில் ஸ்டம்ப் லைனில் வீசினார், அதில் கான்வே ஒரு முன் கால் டிரைவில் அடித்தார். பந்து லேசான காற்றில் இருந்தது. ஹர்திக் பாண்டியா ஓடி வந்து இடது கையை நீட்டி பந்தை பிடித்தார்.கேட்சை முடித்த பாண்டியா மீண்டும் சமநிலையை அடைய டைவ் செய்து எதுவும் நடக்காதது போல் நின்றார். ஆனால் அதற்குள் அவர் ஸ்பெஷல் கேட்ச் எடுத்தது தெரிந்தது. கேட்ச் எடுக்க ஹர்திக் பாண்டியாவின் எதிர்வினை நேரம் 0.5 வினாடி  மட்டுமே.

ஹர்திக் பாண்டியாவின் கேட்சைப் பார்த்து டெவான் கான்வே திகைத்தார். கிரிக்கெட் ரசிகர்களின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. ஹர்திக் பாண்டியாவின் கேட்ச் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. டெவோன் கான்வேயால் 16 பந்துகளில் ஒரு பவுண்டரி உதவியுடன் 7 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.