தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சிந்தாமணி நகரை சேர்ந்தவர் சந்திரசேகர்(54) . இவர் அதே பகுதியில் பர்னிச்சர் கடை ஒன்று நடத்தி வருகிறார். சந்திரசேகர் தன்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டை வாடகைக்கு விட்டிருக்கிறார்.

அங்கு 42 வயதுடைய பெண் ஒருவர் கணவனை இழந்து தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் வாடகைக்கு இருக்கிறார். சந்திரசேகருக்கு அந்த பெண்ணின் மீது ஆசை  இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கடந்த 4-ம் தேதி அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த நேரம் பார்த்து சந்திரசேகர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளார். இவரைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் சந்திரசேகரை வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளார்.

அப்போது சந்திரசேகர் அந்த பெண்ணிடம் அத்துமீறி நடக்க முயன்றுள்ளார். இதனால் அந்த பெண் கத்தி கூச்சலிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தார். பின்பு அந்த பெண்ணை சந்திரசேகர் தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்தும் சென்றுள்ளார்.

இது குறித்து அந்தப் பெண் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சந்திரசேகரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.