கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு துறையில் பெண் ஒருவர் ஹவுஸ் கீப்பிங் ஆக வேலை பார்த்து வந்துள்ளார். இந்தப் பெண் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக அங்கு வேலைக்கு சேர்ந்த நிலையில் கணவர் மற்றும் 2 குழந்தைகளுடன் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். அந்த பெண்ணுக்கு மாதம் ரூ.7500 ஊதியமாக வழங்கப்படுகிறது. இதில் அந்த பெண்ணின் கணவருக்கு கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக எச்ஐவி நோய் இருப்பது தெரிய வந்தது. இதனை அந்தப் பெண் தன்னுடன் வேலை பார்க்கும் ‌ சக ஊழியர் ஒருவரிடம் தெரிவித்த நிலையில் அந்த நிறுவனம் 3 மாத சம்பளத்துடன் கட்டாய விடுமுறை வழங்கி அந்த பெண்ணை வீட்டுக்கு அனுப்பியது.

இது தொடர்பாக அந்தப் பெண் பலமுறை கேட்டும் அவர்கள் வேலை கொடுக்க மறுத்துவிட்டனர். இதைத்தொடர்ந்து அந்த பெண் எச்ஐவி குறைதீர்ப்பாணையத்தை அணுகினார். இது தொடர்பாக அந்நிறுவனத்தின் அதிகாரி விசாரணை நடத்தியதில் உடனடியாக அந்த பெண்ணுக்கு மீண்டும் அதே நிறுவனத்தில் வேலை கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு அந்தப் பெண் 2 மாதங்களாக வேலைக்கு சென்று வருகிறார். மேலும் இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ள நிலையில் பலரும் இந்த செயலுக்கு கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.