நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு நகரச் சேர்ந்தவர் அம்பேத்கர். இவர் திருச்செங்கோடு தொழிலாளர் துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019 நவம்பர் மாதம் திருச்செங்கோட்டில் இருக்கும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்களா என அம்பேத்கர் சோதனை நடத்தினார்.

அப்போது ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் 14 வயது சிறுவன் வேலை பார்த்தது தெரியவந்தது. இதனால் அந்த கடையின் உரிமையாளரான உதயகுமாருக்கு அம்பேத்கர் நோட்டீஸ் கொடுத்துள்ளார்.

மேலும் நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கொடுக்க வேண்டும் என அம்பேத்கர் வற்புறுத்தியுள்ளார். இதுகுறித்து உதயகுமார் நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித்தார்.

இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை உதயகுமார் அம்பேத்கரிடம் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அம்பேத்கரை சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த வழக்கினை விசாரித்த நாமக்கல் மாவட்டம் முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அம்பேத்கருக்கு 3 1/2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.