கேரள மாநிலம் வயநாடு பகுதியில் உள்ள 3 இடங்களில் அடுத்தடுத்து கடந்த 29ஆம் தேதி நிலச்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் பெரிய அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் உள்ள வீடுகள் பல வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட நிலையில் ஏராளமான வீடுகள் மண்ணில் புதைந்தது. இந்த நிலச்சரிவில் சிக்கி இதுவரை 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ள நிலையில் தொடர்ந்து மீட்பு பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இதுவரை 240 பேரை காணவில்லை என்று கூறப்படுவதால் அவர்களை தேடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நிவாரண பணிகளுக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என்று கேட்டிருந்தார். இதைத் தொடர்ந்து முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு திரை உலக பிரபலங்கள் உட்பட பலரும் உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் மோகன்லால் என்ற நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது அவர் ராணுவ உடை அணிந்திருந்தார். அவர் ஆய்வு பணிகளை முடித்த பிறகு நிவாரண பணிகளுக்கு ரூ.3 கோடி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் முதல் முறையாக ஒரு பிரபலம் களத்தில் இறங்கி பார்வையிட்டது மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
