பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்களுக்கு முக்கியமான கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். விஜய்யின் நோக்கமும், அதிமுக கூட்டணியின் நோக்கமும் திமுக ஆட்சியை அகற்றுவதுதான் என்று குறிப்பிட்ட அவர், இந்தத் தேர்தலில் விஜய் ஓரளவுக்கு வாக்குகளைப் பெற்றாலும் வெற்றி பெற முடியாது என்று தெரிவித்தார்.
எனவே, விஜய்யின் ஆதரவாளர்கள் தங்கள் வாக்குகளை வீணாக்காமல், திமுகவைத் தோற்கடிக்க வலிமையான அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். இதற்குத் தனது சொந்த அனுபவத்தையே உதாரணமாகக் காட்டினார் அன்புமணி. 2016-ஆம் ஆண்டு தேர்தலின் போது ‘மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்று தான் தீவிரப் பிரச்சாரம் செய்தும், மக்கள் “அன்புமணி நல்லவர்தான், ஆனால் வெற்றி பெற மாட்டார்” என்று கருதி அதிமுகவிற்கு வாக்களித்ததை நினைவு கூர்ந்தார்.
அதே சூழல்தான் இப்போதும் இருப்பதாகவும், திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற லட்சியம் நிறைவேற வேண்டுமானால், விஜய்யின் ரசிகர்கள் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
