உசிலம்பட்டியைச் சேர்ந்த 10 வயது சிறுமி சாரா செல்லன், தாதார்–திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது திடீரென மயங்கி உயிரிழந்தார்.

மும்பை ரோஹாவில் இருந்து மதுரை நோக்கி தாயார் மாயாவனம் செல்லனுடன் வந்துகொண்டிருந்த சாரா, கேரளாவின் காஞ்சங்காடு ரயில் நிலையத்தில் ரயில் நின்றபோது மயங்கி விழுந்தார். அப்போது அருகில் இருந்த பயணிகள் அவளை கீழிறக்கி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வாயில் இரத்தம் வெளியேறிய நிலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி, பரிசோதனையில் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஹோஸ்டுர்க் போலீசார் மருத்துவமனைக்கு வந்து தாயாரிடம் விசாரணை நடத்தினர். மும்பையில் நீரிழிவு நோய்க்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், அதற்கான மருத்துவ ஆவணங்களை தாய் போலீசாருக்கு காட்டியதாகவும் தெரியவந்தது. சிறுமி சிகிச்சைக்காகவே தாயாருடன் கேரளா வந்திருந்தார்.

சிறுமியின் தந்தை செல்லன் மும்பையில் வேலை செய்து வருகிறார். சாராவுக்கு ஒரு சகோதரியும் உள்ளார். திடீர் மரணம் குடும்பத்தினரை அதிர்ச்சியிலும் துயரத்திலும் ஆழ்த்தியுள்ளது.