பேரறிஞர் அண்ணாவின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு மதிமுக சார்பாக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் நேற்று அமைதிப் பேரணி நடைபெற்றது. அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய வைகோ, தமிழ்நாடு தொடர்ந்து வஞ்சிக்கப்படுமானால் மீண்டும் பிரிவினை கோரிக்கை குரல் எழும் என்று பேசியவர் அறிஞர் அண்ணா. ஒவ்வொரு மாநிலமும் சுயாட்சி உள்ள மாநிலமாக அமைய வேண்டும் என்று கூறியது அவர்தான். ஆனால் இன்று மோடி அதனை குழி தோண்டி புதைத்து விட்டார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று துடித்துக் கொண்டிருக்கின்றார். நான் சுமார் 60 ஆண்டு காலம் அண்ணாவின் படையில் இருந்திருக்கிறேன். இதில் 30 ஆண்டுகள் திமுகவில் பணியாற்றினேன். மொத்தமாக 60 ஆண்டுகள் என்னை நானே பொதுவாழ்வில் ஈடுபடுத்திக் கொண்டு பொது மக்களுக்காக தொடர்ந்து பணியாற்றி வருகின்றேன். சில தமிழ் இன துரோகிகள் அண்ணாவை கொச்சைப்படுத்தி இன்று பேசி வருகிறார்கள்.
மூடநம்பிக்கைகளை உடைக்க பெரியார் தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளாவில் உள்ள வைக்கத்திலும் போராடியுள்ளார். அப்படிப்பட்ட பெரியாரை நெஞ்சிலே பூசி கொண்டிருக்கிற எங்களுக்கு துரோகிகள் பேசுகிற ஒவ்வொரு வார்த்தையும் நெஞ்சில் ஈட்டி சொருகியது போல என்று கோபமாக பேசியுள்ளார்.
