ஹரியானாவின் நூஹ் மாவட்டத்தில் குற்றப்பாதையில் இருந்த இளைஞர்கள் தங்களின் 55 மொபைல் போன்களைப் பொதுவெளியில் உடைத்து, இனி ஒருபோதும் தவறு செய்ய மாட்டோம் என உறுதியேற்றுள்ளனர். நாகினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுக்புரி கிராமத்தில் நடைபெற்ற இந்த நெகிழ்ச்சியான சம்பவம், சமூகத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. நூஹ் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் அர்பித் ஜெயின் முன்னெடுத்த விழிப்புணர்வு பிரச்சாரத்தால் ஈர்க்கப்பட்ட இந்த இளைஞர்கள், சட்டவிரோத செயல்களுக்குப் பயன்படுத்திய தங்களின் மொபைல் போன்களை கிராம மக்கள் முன்னிலையில் உடைத்து, பழைய வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இனி நேர்மையான வழியில் சம்பாதித்து, சமூகத்திற்குப் பயனுள்ள குடிமக்களாக வாழ்வோம் என்றும் அவர்கள் சபதம் எடுத்துள்ளனர்.

இந்த நெகிழ்ச்சியான நிகழ்வில் துணை காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் கட்காட் மற்றும் நாகினா காவல் ஆய்வாளர் சச்சின் குமார் ஆகியோர் கலந்து கொண்டு இளைஞர்களின் இந்த மறுவாழ்வு முயற்சியைப் பாராட்டினர். குற்றவாளிகளைக் கைது செய்வது மட்டுமே காவல்துறையின் கடமையல்ல, அவர்களை நல்வழிப்படுத்துவதும், மறுவாழ்வுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதுமே முக்கியம் என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர். மேலும், கிராமத் தலைவர்களும், பெரியோர்களும் இந்த இளைஞர்களுக்கு ஆதரவு தெரிவித்ததுடன், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தினர். சமூகத்தின் ஆதரவும், வழிகாட்டுதலும் இருந்தால் மட்டுமே இதுபோன்ற நீண்டகால மாற்றங்கள் சாத்தியமாகும் என கிராம ஊராட்சித் தலைவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.