சென்னை நகரில் நேற்று பல இடங்களில் நடந்த தொடர் செயின் பறிப்பு சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தின. நந்தனம், சாஸ்திரிநகர், இந்திரா நகர், கிண்டி, வேளச்சேரி, விஜயா நகர் உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக செயின் பறிக்கப்பட்டதை அடுத்து போலீசார் உயர் மட்ட சோதனை நடவடிக்கைகள் மேற்கொண்டனர். விமான நிலையத்திற்கு கூட தகவல் அனுப்பப்பட்டு, கடைசி நேரத்தில் விமான டிக்கெட் எடுப்பவர்கள் மீது தீவிர கண்காணிப்பு வைக்கப்பட்டது.
இதன் பின்னணியில், ஐதராபாத் செல்லும் விமானத்திற்குள் கடைசி நேரத்தில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை செய்தனர். அபோது அவர்கள் தான் பறிப்பு கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்பதும் உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவர்கள் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதே நேரத்தில் சென்ட்ரல் ரெயில்வே நிலையம் வழியாக தப்ப முயன்ற ஒருவரும் ஆந்திர எல்லையில் கைது செய்யப்பட்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லும் போது, குலாம் என்ற ஒருவர் போலீசாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்றனர்.
இது பற்றி போலீஸ் கமிஷனர் அருண் வெளியிட்ட செய்தி குறிப்பில் “இந்த கொள்ளை சம்பவத்தில் 20 பேர் கொண்ட கும்பலுக்கு தொடர்பு உள்ளது. செயின் பறிப்பு செய்தவர்கள் ‘இரானி’ கொள்ளையர்கள். அவர்கள் மீதான நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. குற்றம் நடந்த 3 மணி நேரத்துக்குள் போலீசார் அவர்களை பிடித்துள்ளனர். சிசிடிவி காட்சிகள், ஷூ அடையாளம் மற்றும் விமானத்தில் சோதனை ஆகியவையின் மூலமாக குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். குலாம் 2 ரவுண்ட் சுட, போலீசார் தற்காப்புக்காக ஒரு முறை சுட்டனர். தற்போது, கைதானவர்களிடமிருந்து பறிக்கப்பட்ட செயின்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட சல்மான் மற்றும் அஜ்மலுடன், என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட ஜாபர் தொடர்புடையவர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்” எனக் கூறினார்.