விடுதியில் நண்பர்களுடன் ஜாலியாக இருந்த 24 வயது இளைஞர் ஒருவருக்கு, திடீரென இதயத் துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 212 முறை என அபாயக் கட்டத்தைத் தாண்டி எகிறியதால் பரபரப்பு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் மற்றும் பதற்றத்துடன் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்ட அந்த இளைஞருக்கு, ஆரம்பத்தில் எதனால் இப்படி ஆனது என்று மருத்துவர்களுக்கே புரியவில்லை.
அவரோடு இருந்த நண்பர்கள் அனைவரும் மது அருந்திவிட்டு, சிகரெட் மற்றும் கஞ்சா (Joint) புகைத்திருந்தாலும், மற்ற 4 பேருக்கு ஏதும் ஆகாமல் இந்த இளைஞருக்கு மட்டும் இதயம் துடித்தது ஏன் என மருத்துவர்கள் தீவிரமாக விசாரித்தனர். அப்போதுதான் அந்த இளைஞர், முந்தைய நாள் தனது உடலில் இருந்த சாதாரண பூஞ்சை தொற்றுக்காக (Fungal Infection) ‘புளூகோனசோல்’ (Fluconazole 150 mg) என்ற ஒரு மாத்திரையை மருத்துவர் பரிந்துரை இன்றி கடையில் வாங்கிப் போட்டது தெரியவந்தது.
இந்த மாத்திரை உடலில் இருக்கும்போது கஞ்சா போன்ற போதைப் பொருட்களைப் பயன்படுத்தினால், கல்லீரலால் அந்த நச்சுக்களை வெளியேற்ற முடியாமல் உடலில் தங்கி, இதயத் துடிப்பை பல மடங்கு எகிறச் செய்துவிடும் என்ற அதிர்ச்சி உண்மையை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.
சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் அந்த இளைஞர் உயிர் தப்பினாலும், “மருத்துவர் ஆலோசனையின்றி சாதாரண மாத்திரைதானே என்று நாம் போடும் ஒரு விஷயம், சில நேரங்களில் எமனாக மாறும்” என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
