குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வேலைக்குச் சேர்ந்த பெண் ஒருவர், முதிய தம்பதியினருக்கு மயக்க மருந்து கலந்த பானத்தைக் கொடுத்து நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்த துயர சம்பவம் அரங்கேறியுள்ளது. தரியாபூர் பகுதியைச் சேர்ந்த 81 வயது முதியவர் அப்துல்பாய் இஸ்மாயில் என்பவரது வீட்டிற்கு லதாபென் (55) என்ற பெண் சமையல் மற்றும் வீட்டு வேலை தேடி வந்துள்ளார்.

மேலும் அவரை நம்பி வேலையில் சேர்த்த நிலையில், சமயம் பார்த்து அவர் தம்பதியினருக்கு வழங்கிய லஸ்ஸியில் மயக்க மருந்தை கலந்துள்ளார். இதனை அருந்திய இருவரும் மயக்கமடைந்ததை தொடர்ந்து, வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு அந்தப் பெண் தப்பிச் சென்றுள்ளார்.

இதனால் அக்கம் பக்கத்தினரால் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஏற்கனவே உடல்நலக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருந்த முதியவர் அப்துல்பாய் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி தொடர்ந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், அந்தப் பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தலைமறைவாக இருந்த லதாபென்னை கைது செய்தனர். விசாரணையில் அவர் மீது ஏற்கனவே பல்வேறு திருட்டு மற்றும் சூதாட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.