
தமிழகத்தில் நேற்று இரவு மின்கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் ஒரு யூனிட்டுக்கு 20 பைசா முதல் 55 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது. இந்நிலையில் மின்கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டதற்கான காரணத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. இது குறித்து கூறியதாவது, மத்திய அரசின் நிதியை பெறுவதற்கு ஆண்டுதோறும் மின்சார கட்டணத்தை உயர்த்துவது அவசியம். அதிகரித்து வரும் நிதி இழப்பை ஈடு செய்ய ஆண்டுதோறும் மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கு பதில் செப்டம்பர் மாதம் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த வருடம் 6 சதவீத வரை மின்கட்டணத்தை உயர்த்த வழி இருந்தும் 2.18 சதவீதம் மட்டுமே உயர்த்தப்பட்டது. இதில் வீடுகளுக்கான 2.18 சதவீத மின்கட்டணத்தை முழுவதுமாக அரசே மின் மானியம் மூலம் ஏற்றுக்கொண்டது. தமிழ்நாடு ஒழுங்குமுறை ஆணைய விதிகளின்படி இந்த வருடம் 4.83 சதவீதம் வரை மின்கட்டணத்தை உயர்த்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும் மின்சார வாரியம் கட்டணத்தை மறு சீரமைக்க வேண்டிய நிலையிலும் சிறிய அளவில் தான் மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.