ஒருவரின் தோற்றத்தை மேம்படுத்துவதில் சிகை அலங்காரம் முக்கிய இடம் பெறுகிறது. நவநாகரிக வெட்டுகள், வித்தியாசமான பின்னல்கள், பண்டிகை காலத்துக்கான சிறப்பு வடிவங்கள் என தலைமுடி அலங்காரத்தில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள ஒரு வித்தியாசமான சிகை அலங்கார வீடியோ தற்போது கவனத்தை ஈர்த்து வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான சிகை அலங்காரம் இடம் பெற்றுள்ளது. வழக்கமான அலங்கார முறைகளில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இந்த முயற்சி, படைப்பாற்றலும் நகைச்சுவையும் கலந்ததாக இருப்பதால், குறுகிய நேரத்தில் வைரலாகியுள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by Nagmahairstelys (@nagmahairstely)

இந்த சிகை அலங்காரத்திற்கு விலையுயர்ந்த கருவிகளோ, தொழில்முறை உபகரணங்களோ பயன்படுத்தப்படவில்லை. பெண்ணின் தலைமுடியின் மையப்பகுதியில் ஒரு சாதாரண பாட்டில் வைக்கப்பட்டு, அதன் சுற்றிலும் முடி சுருட்டி கூம்பு வடிவில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிறிஸ்துமஸ் மரம் போன்ற அடிப்படை வடிவம் உருவாக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து, பச்சை நிற அலங்காரங்கள், சிறிய விளக்குகள் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு, முழு சிகை அலங்காரமும் ஒரு சிறிய கிறிஸ்துமஸ் மரம் போல் தோற்றமளிக்கிறது. தூரத்திலிருந்து பார்ப்பதற்கு, ஒருவரின் தலையில் கிறிஸ்துமஸ் மரம் நிற்பதைப் போன்ற காட்சியே உருவாகிறது.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதையடுத்து, பயனர்கள் பலரும் நகைச்சுவையான கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். சிலர் இதனை மிகவும் படைப்பாற்றலான முயற்சி என பாராட்டியுள்ள நிலையில், சிலர் இது சமூக ஊடகங்களுக்கு மட்டுமே ஏற்ற அலங்காரம் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும், இந்த வீடியோவின் நோக்கம் ஃபேஷன் வழிகாட்டுதல் வழங்குவது அல்ல, மக்களை மகிழ்விப்பதே என்று தெரிவிக்கப்படுகிறது. அன்றாடப் பொருட்களை வித்தியாசமான முறையில் பயன்படுத்தி உருவாக்கப்படும் இத்தகைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் அதிக கவனம் பெறுவது குறிப்பிடத்தக்கது.