உலகின் அதிக வயதுடைய நபராகக் கருதப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்தவ துறவி இனாஹ் கானாபாரோ, கடந்த ஏப்ரல் 30-ஆம் தேதி காலமானார். இவரது வயது 116. இவரது மறைவுக்கு பிறகு, அந்த பட்டத்தை இங்கிலாந்தைச் சேர்ந்த ஈதல் கேடர்ஹாம் என்ற மூதாட்டி எடுத்துக்கொண்டுள்ளார்.

தற்போது 115 வயதாகும் ஈதல், இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் வசித்து வருகிறார். 1909ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21-ஆம் தேதி தெற்கு இங்கிலாந்தில் உள்ள ஷிப்டன் பெல்லிங்கர் கிராமத்தில் பிறந்த ஈதல், இரு உலகப் போர்களையும் பார்த்தவர்.

18 வயதில் ஆங்கிலேய ஆட்சிக்குட்பட்ட இந்தியா வந்த அவர், அங்கு ஆங்கிலேயர் குடும்பத்தில் குழந்தைகள் பராமரிக்கும் வேலை செய்துள்ளார்.  இந்தியாவில் மூன்று ஆண்டுகள் கழித்த பின் தாயகம் திரும்பிய ஈதல், பின்னர் ஹாங்காங்கில் பிரிட்டிஷ் ராணுவத்தில் பணியாற்றிய நார்மனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். 1976-ஆம் ஆண்டு நார்மன் மறைந்தார்.

தனது நீண்ட ஆயுளுக்கான காரணத்தைப் பற்றி ஈதல் கூறியதாவது, “வாக்குவாதம் செய்யாதீர்கள். நான் ஒருபோதும் வாக்குவாதம் செய்ய மாட்டேன். பிறர் பேசுவதைக் கவனித்து, எனக்குப் பிடித்ததை மட்டுமே செய்வேன்,” எனக் கூறியுள்ளார். இவர் உலகின் அதிக வயது மனிதராக தேர்வு செய்யப்பட்டதை உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கொண்டாடினர்.