உத்தர பிரதேச மாநிலம் லக்ஷ்மன்பூர் ஜாத் கிராமத்தைச் சேர்ந்த ஹிருதய் லால் என்பவர், அதே பகுதியில் வசிக்கும் அனுஜ் என்ற நபருக்கு ₹700 கடன் கொடுத்திருந்தார். கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதி ஹிருதய், ₹200 திருப்பி தருமாறு கேட்டபோது, அனுஜ் பணம் இல்லை என கூறியதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அது கடுமையான தகராறாக மாறியது.
இந்த தகராறின் போது, அனுஜ் மற்றும் அவரது சகோதரர் ராம் கிஷோர், மகன் ஜெகதீஷ், மருமகன்கள் பங்கஜ் மற்றும் சந்தன் ஆகியோர் ஹிருதய் லாலை பலத்தமாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஹிருதய் மயங்கி விழுந்த நிலையில், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிகிச்சை பலனின்றி ஹிருதய் லால் உயிரிழந்தார். இதனையடுத்து குற்றவாளிகளான ஐந்துபேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மரணம் குறித்து உறவினர்கள் கடும் மனவேதனையில் குடும்பத்தினர் ஹிருதயின் உடலை எடுத்துக்கொண்டு கோண்டா-லக்னோ நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் மற்றும் அவர்களின் வீடுகளில் ‘புல்டோசர் நடவடிக்கை’ மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தனர்.
போலீஸ் உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு மறியலை முடிவுக்கு கொண்டு வந்த நிலையில், தற்போது ஜாத் கிராமத்தில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னரே ஹிருதய் லால் திருமணம் செய்திருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
