டெல்லி வீதிகளில் பெண் வேடமிட்டுச் சமூக பரிசோதனை  முயற்சியில் ஈடுபட்ட சீனாவைச் சேர்ந்த பிளாக்கர் ஒருவர் எதிர்நோக்கிய அதிருப்திகரமான அனுபவங்கள் இணையத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. மேக்கப் மற்றும் பெண்கள் அணியும் உடைகளைத் அணிந்துகொண்டு நகரின் பல்வேறு கூட்ட நெரிசல் மிகுந்த பகுதிகளுக்குச் சென்ற அவர், தான் தனியாக நடந்து செல்லும் போது பெண்களுக்கு எத்தகைய கவனமும் தொல்லைகளும் ஏற்படுகிறது என்பதை அறியவே இந்த முயற்சியில் இறங்கியதாகத் தெரிவித்தார்.

ஆரம்பத்தில் சிலருடன் உரையாடல்களைத் தொடங்கிய அந்த பிளாக்கர், போகப் போக சில ஆண்களின் தொடர்ச்சியான தொல்லைகளாலும் பின்தொடர்தலாலும் கடுமையான அசௌகரியங்களைச் சந்தித்ததாகக் கூறியுள்ளார் . குறிப்பாக, இரண்டு நபர்களின் காரில் ஏறியபோது நிலைமை முற்றிலும் விபரீதமாக மாறியுள்ளதாகவும், தன்னைக் கட்டாயப்படுத்த முயன்றபோது சுதாரித்துக்கொண்டு தனது உண்மையான குரலிலும் அடையாளத்தையும் வெளிப்படுத்தித் தப்பியதாகவும் அவர் அந்த வீடியோவில் விவரித்துள்ளார்.

இந்தச் சோதனையின் போது சில சவாலான தருக்கங்களை அவரே தூண்டிவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தாலும்  அன்றாட வாழ்வில் பெண்கள் பாதுகாப்புக்காகவும் தேவையற்ற கவன ஈர்ப்புகளுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களை உணர்த்துவதே தனது நோக்கம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இணையத்தில் லட்சக்கணக்கானோரால் பார்க்கப்பட்ட இந்த பகீர் வீடியோவானது, இதுபோன்ற ஆபத்தான செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாம் என்ற எச்சரிக்கையுடன் நிறைவடைகிறது.