கடந்த சில நாட்களாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் கடுமையான மின்வெட்டினால் பாதிக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்களிடமிருந்தும் சமூக ஆர்வலர்களிடமிருந்தும் தொடர் புகார்கள் எழுந்தன. மருத்துவமனைகளில் ஏற்படும் திடீர் மின்வெட்டு காரணமாக அவசரச் சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகச் செய்திகள் வெளியான நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்க மின்வாரியம் தற்போது அதிரடிப் பாய்ச்சலில் இறங்கியுள்ளது.
மருத்துவமனைகளுக்கு எந்தவொரு சூழ்நிலையிலும் தங்கு தடையின்றி 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்களுக்குத் தலைமை அலுவலகத்தில் இருந்து மிகக் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவில் இருக்கும் நோயாளிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்படக் கூடாது என்பதை உறுதி செய்ய, அனைத்து மருத்துவமனைகளிலும் தேவையான முன்னெச்சரிக்கை மற்றும் மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும் என்றும், இதில் ஏதேனும் அலட்சியம் காட்டப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றும் மின்வாரியம் அதிரடியாக எச்சரித்துள்ளது!
