இந்திய கிரிக்கெட் அணி, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் பங்கேற்கவுள்ளது. இதற்கான இந்திய அணிகள், இன்று பிசிசிஐயால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன.

அதன் படி இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒருநாள் தொடர் அக்டோபர் 19-ந் தேதியன்று பெர்த்தில் தொடங்குகிறது. இரண்டாவது போட்டி அடிலெய்டில் அக்டோபர் 23-ந் தேதியும், மூன்றாவது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் அக்டோபர் 25-ந் தேதியும் நடைபெறும்.

இதனையடுத்து, டி20 தொடர் அக்டோபர் 29 முதல் நவம்பர் 6 வரை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் சுப்மன் கில், ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாக செயல்படுவார்.

சமீப காலமாக டி20 மற்றும் டெஸ்ட் அணியில் இருந்து ஓய்வு பெற்றிருந்த ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி, கடந்த பிப்ரவரி–மார்ச் மாதங்களில் நடைபெற்ற சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு மீண்டும் ஒருநாள் அணியில் இணைந்துள்ளனர்.

அணியில் விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். துருவ் ஜூரெல் மாற்று கீப்பராக தேர்வாகியுள்ளார். யஷஸ்வி ஜெய்ஸ்வால், நிதிஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ராணா உள்ளிட்ட இளம் வீரர்களும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இந்திய ஒருநாள் அணி (ODI):

சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), அக்சர் படேல், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), நிதிஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால்.

அதே நேரத்தில் சஞ்சு சாம்சன் மற்றும் ஜடேஜா அணியில் இடம்பெறாதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசியாக இந்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ஜடேஜா 11 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். அவர் ஏற்கனவே சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்ட நிலையில் தற்போது ஒரு நாள் தொடரில் மூத்த வீரர்கள் ரோஹித் மற்றும் விராட் ஆகியோர் இடம் பெற்றுள்ள நிலையில் ஜடேஜா தேர்வு செய்யப்படாதது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதே நேரத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்ரேயேஸ் ஐயர் இந்த தொடரில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் தரும் செய்தி.

இதேபோன்று ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். சுப்மன் கில் இங்கு துணை கேப்டனாக உள்ளார்.

அணியில் அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே உள்ளிட்ட அதிரடிப் பேட்ஸ்மன்கள், ஜஸ்பிரித் பும்ரா, வருண் சக்கரவர்த்தி, அர்ஷ்தீப் சிங் உள்ளிட்ட முக்கிய பந்துவீச்சாளர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.

இந்திய டி20 அணி (T20I):

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சுப்மன் கில் (துணை கேப்டன்), திலக் வர்மா, நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர்.