நளினி உனாகர் என்ற கண்டென்ட் கிரியேட்டர் தனது எக்ஸ் (X) தளத்தில் பகிர்ந்துள்ள ஒரு தகவல் தற்போது சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது. தனது வீட்டுக்கு அருகிலுள்ள டிரை கிளீனிங் கடைக்காரரிடம் அவர் பேசியபோது, அந்தத் தம்பதி மாதம் ₹2,00,000-க்கும் அதிகமாகச் சம்பாதிப்பது தெரியவந்தது. தினமும் சுமார் 350 துணிகளை அயர்ன் செய்வதன் மூலமும், விலையுயர்ந்த புடவைகள் மற்றும் சூட்களை டிரை கிளீனிங் செய்வதன் மூலமும் ஒரு நாளைக்கு ₹10,500 வரை வருமானம் ஈட்டுகின்றனர். சொந்தக் கடை என்பதால் வாடகை கிடையாது, மின்சாரக் கட்டணம் மற்றும் ஆட்கூலி போக மாதம் ₹2,37,500 நிகர லாபமாக அவர்களுக்குக் கிடைக்கிறது.

​இந்தப் பதிவு வெளியானதும், ஐடி ஊழியர்கள் மற்றும் பிற துறை சார்ந்தவர்கள் பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். “நாங்கள் விடிய விடிய கண் விழித்துக் கோட் எழுதும் சம்பளத்தை, இவர் நிமிடங்களில் சுருக்கங்களை நீக்கி சம்பாதிக்கிறார்” என்று ஒரு பயனர் கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். அதே சமயம், “இவர்கள் முறையாக வருமான வரி செலுத்துவதில்லை” என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. எது எப்படியோ, “வருமானம் என்பது படிப்பைப் பொறுத்தது அல்ல, நாம் வழங்கும் சேவையின் மதிப்பைப் பொறுத்தது” என்ற உண்மையை இந்தச் சம்பவம் மீண்டும் ஒருமுறை உரக்கச் சொல்லியிருக்கிறது.