தமிழக அரசியலில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா வெளியிட்டுள்ள கருத்துக்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
ராஜபாளையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய சசிகலா, அண்மையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொதுக்கூட்டங்களில் காட்டிய சில பழைய புகைப்படங்கள் குறித்து தனது ஆதரவைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் பேசியதாவது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஒரு புகைப்படத்தைக் காண்பித்துப் பேசினார்.
அந்தப் புகைப்படம் உண்மைதானே? அது ஏற்கனவே தொலைக்காட்சிகளிலும் ஊடகங்களிலும் வந்த விஷயம் தானே? உண்மையைச் சுட்டிக்காட்டியதற்காக அவரை அவதூறாகப் பேசுவது முறையல்ல. செய்த தவறை மறைக்கப் பார்ப்பது ஏன்? என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடிய அவர், நன்றியுணர்வு குறித்து ஒரு காட்டமான உதாரணத்தைக் குறிப்பிட்டார். உயர்ந்த பதவிக் கொடுத்தவர்களுக்கு உண்மையாக, நன்றியுடன் இருந்திருக்க வேண்டும். வீட்டில் வளர்க்கும் ஒரு நாய்க்குட்டிக்கு ஒரு பிஸ்கட் போட்டால் கூட அது வாழ்நாள் முழுவதும் நன்றியோடு இருக்கும். ஆனால், அந்த நன்றியுணர்வு கூட இல்லாமல், நீங்கள் செய்த பழைய காரியங்களை அவர் (உதயநிதி) சுட்டிக்காட்டுவதில் என்ன தவறு இருக்கிறது? என்று சசிகலா ஆவேசமாகப் பேசினார்.
மேலும் ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அவர்கள் சசிகலாவின் காலில் விழுந்து ஆசி பெற்ற பழைய நிகழ்வுகளை உதயநிதி ஸ்டாலின் முன்னிலைப்படுத்தி வரும் நிலையில், சசிகலாவின் இந்த நேரடித் தாக்குதல் அதிமுக தொண்டர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
