
மராட்டிய மாநிலத்தில் யாஷிரி ஷிண்டே (22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 ஆம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி சென்றவர் வீடு திரும்பவில்லை. இதனால் பயந்து போன அவரின் பெற்றோர் வேலை பார்க்கும் இடத்திற்கு செல்போன் மூலம் அழைத்து விசாரித்தனர். அந்தப் பெண் அன்றைய தினத்தில் முன்கூட்டியே சென்று விட்டதாக கூறினர். இதுகுறித்து அவரது பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து யாஷிரி ஷிண்டேவை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ரயில் நிலையத்தின் அருகே இளம் பெண் ஒருவர் சடலமாக கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் வந்தது. அதன் படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது அந்தப் பெண்ணின் முதுகு மற்றும் வயிற்றில் கத்திக்குத்து இருப்பதைக் கண்டனர். மேலும் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து காணாமல் போனதாக புகார் அளித்த பெண்ணின் பெற்றோரை வரவழைத்து அடையாளம் காண செய்தனர்.
அதில் காணாமல் போன யாஷிரி ஷிண்டே என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து அந்தப் பெண்ணின் பெற்றோர் தாவூத் சேக் என்பவர் தனது மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் தான் என் மகளை கொலை செய்திருப்பார் என்று காவல்துறையினரிடம் கூறினர். இதனால் அந்த கோணத்திலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். வேலைக்கு சென்ற பெண் சடலமாக மீட்கப்பட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.