சத்தீஷ்கர் மாநிலத்தில் உள்ள பல்ராம்பூர் மாவட்டத்தில் சொகுசு காரில் 8 பேர் பயணம் செய்துள்ளனர். இந்த சொகுசு கார் லாரிமா பகுதியில் இருந்து சுராஜ்போர் மாவட்டத்திற்கு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் இரவு நேரம் என்பதால் கார் ஓட்டுநர் எதிர்பாராத விதமாக காரை குளத்திற்குள் விட்டுவிட்டார். கார் குளத்திற்குள் கவிழ்ந்துள்ளது. காரின் உள்ளிருந்த எட்டு பேரும் அலறி அடித்துக்கொண்டு காரை விட்டு வெளியே செல்ல முயற்சித்துள்ளனர். இந்த விபத்து இரவு நேரத்தில் நடந்துள்ளதால் உதவுவதற்கு அப்பகுதியில் ஒருவரும் இல்லை.

இதனால் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உள்பட ஒருவரின் பின் ஒருவராக காரில் இருந்த அனைவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து அறிந்த மீட்பு குழுவினர் 6 பேரின்  சடலங்களையும் நேற்றிரவு குளத்திலிருந்து மீட்டுள்ளனர். மீதம் இருந்த இரண்டு பேரின் சடலங்கள் இரவில் தேட முடியவில்லை. இதனால் இன்று காலை மீதமுள்ள இரண்டு பேரின் சடலங்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.