விடுமுறை காலம் தொடங்கியவுடன், இந்தியா முழுவதும் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதற்காக பயணிக்கத் தொடங்குகின்றனர். ரயில் நிலையங்களிலும் பேருந்து நிறுத்தங்களிலும் பயணிகளின் கூட்டம் அலைமோதுகிறது. ரயில்களின் கொள்ளளவை விட பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், எங்கும் உற்சாகமும் மகிழ்ச்சியும் நிறைந்த சூழல் காணப்படுகிறது. குறிப்பாக, சத் பூஜை பண்டிகையை முன்னிட்டு, பீகார், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் இருந்து மக்கள் தங்கள் கிராமங்களுக்குப் பயணிக்கின்றனர்.

ரயில்களிலும் பேருந்துகளிலும் இடமில்லாத நிலையிலும், “வீட்டுக்குப் போக வேண்டும், குடும்பத்துடன் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்” என்ற உற்சாகம் எல்லோரிடமும் தெரிகிறது. இந்தக் கூட்ட நெரிசலுக்கு மத்தியில், ஒரு உணர்ச்சிமிக்க வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில், ஒரு ரயில்வே ஊழியர் அனைவரையும் தொடும் வகையில் ஒரு செய்தியைப் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவில், ஒரு ரயில்வே ஊழியர் நகரும் ரயிலில் ஏறி, கையில் மைக்கை வைத்து பயணிகளிடம் பேசுகிறார்.

கூட்டத்தில், அவர் அமைதியான குரலில், “சகோதர, சகோதரிகளே, ஒருவருக்கு ஒருவர் கொஞ்சம் இடம் கொடுங்கள். இடம் இருப்பவர்கள் சற்று நகர்ந்து உட்காருங்கள், மேல் படுக்கையிலோ அல்லது மூலையிலோ இடம் கொடுத்து மற்றவர்களையும் உட்கார வையுங்கள்” என்று கேட்டுக்கொள்கிறார். இந்த எளிமையான, ஆனால் இதயத்தைத் தொடும் வார்த்தைகளால் ரயில் பெட்டி ஒரு கணம் அமைதியாகிறது. பின்னர், அவர் சத் பூஜைக்கு வாழ்த்துகள் தெரிவிக்க, மொத்த பெட்டியும் கைதட்டல்களால் அதிர்கிறது.

இந்த வீடியோவைப் பார்த்த பலர் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். சிலர் அந்த ஊழியரின் உணர்வுப்பூர்வமான அணுகுமுறையையும் மனிதநேயத்தையும் பாராட்டியுள்ளனர். மற்றவர்கள் பயணிகளின் ஒத்துழைப்பையும் பொறுமையையும் புகழ்ந்துள்ளனர். ஒரு பயனர், “இதுதான் இந்திய ரயில்வேயின் உண்மையான அழகு, கூட்டத்திலும் மக்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்கிறார்கள்” என்று எழுதினார். இன்னொருவர், “இப்படிப்பட்ட ஊழியர்களால் பயணம் இனிமையாகிறது” என்று கூறினார்.

இந்த வீடியோ, கூட்டம், குழப்பம், மன அழுத்தம் நிறைந்த தருணங்களிலும், கொஞ்சம் அன்பு, மரியாதை, ஒருவருக்கு ஒருவர் உதவும் உணர்வு இருந்தால், பயணம் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் மாறும் என்பதை உணர்த்துகிறது. சத் பூஜை போன்ற பண்டிகைக் காலத்தில் ஆயிரக்கணக்கானோர் பயணிக்கும்போது, இந்த ரயில்வே ஊழியரின் மைக்கில் ஒலித்த சிறிய செய்தி, இப்போது ‘மனிதநேயத்தின் வைரல் வீடியோ’வாக மாறியுள்ளது.