தமிழ்நாட்டில் திமுக கட்சி இதுவரை 6 முறை ஆட்சி அமைத்த நிலையில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் வெற்றி பெற்று மீண்டும் 7-வது முறை ஆட்சி அமைப்போம் என்று முதல்வர் ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி மற்றும் அந்த கட்சியின் மூத்த தலைவர்கள் கூறி வருகிறார்கள். 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறும் நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2025 ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டின் முக்கிய தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் திமுக கூட்டணி தமிழ்நாட்டில் 38 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக 24 இடங்களை கைப்பற்றியது.

அதன்பிறகு கடந்த 2019 ஆம் ஆண்டில் 22 தொகுதிகளுக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இதில் திமுக 13 இடங்களிலும் அதிமுக 9 இடத்திலும் வெற்றி பெற்றது. இது திமுகவின் வெற்றியை வலுப்படுத்திய நிலையில் உள்ளாட்சித் தேர்தல்களில் திமுக தலைமையிலான கூட்டணி 47.18 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில் அதிமுக 41.55 சதவீத வாக்குகளை பெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 234 இடங்களில் 159 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் திமுக மட்டும் 133 இடங்களை கைப்பற்றியது.

இதனால் மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற நிலையில் அதிமுகவின் 10 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களிலும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் பெரும்பான்மை பெற்ற நிலையில் சென்னை மாநகராட்சியில் திமுக 153 இடங்களை வென்ற நிலையில் அதன் கூட்டணி கட்சிகள் 25 இடங்களில் வெற்றி பெற்றது. இதேபோன்று கோவை மாநகராட்சியில் 100 இடங்களில் திமுக கூட்டணி 96 இடங்களை வென்றது. கடந்த வருடம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி 39 இடங்களையும் கைப்பற்றியது.

இது திமுகவின் தொடர் வெற்றிக்கு சான்றாக அமைந்த நிலையில் 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக அபார வெற்றி பெற்ற நிலையில் பிற கட்சிகள் டெபாசிட் இழந்தது. மேலும் இந்த வெற்றிகள் தமிழ்நாட்டில் திமுகவின் நிலையான அரசியல் ஆதிக்கத்தையும் மக்களின் நம்பிக்கையையும் வெளிப்படுத்தும் நிலையில் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வோம் என்று கூறும் நிலையில் இறுமாப்புடன் 200 தொகுதிகளில் வெல்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.