
சென்னை மாவட்டம் ஈகோர்ட் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அமைந்துள்ளது. அந்த வங்கியின் கிளை மேலாளராக சுகன்யா என்பவர் வேலை பார்த்து வருகிறார். இவர் மத்திய குற்ற பிரிவின் கீழ் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார்.
அந்த புகாரில் கடந்த 2019 ஆம் ஆண்டு சோனிக் பில்டர்ஸ் உரிமையாளர்கள் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 2 வீடுகளை விற்பனை செய்தனர். ஆனால் அதனை மறைத்து அந்த வீட்டின் கதவு எண்களை மாற்றி வேறு போலியான ஆவணங்களை தயார் செய்து அந்த வீட்டின் மூலம் ரூ.60 லட்சம் எங்கள் வங்கியில் கடன் வாங்கியுள்ளனர்.
கடனை திரும்பி செலுத்துமாறு கூறிய போது அதனை செலுத்தாமல் ஏமாற்றி வந்தனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அந்த பெண் புகாரில் தெரிவித்திருந்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் அந்த பில்டர்ஸ்-ன் பாட்னர்-ஆன தேர் விஜயன்(63) என்பவரை கைது செய்தனர்.
அவரிடம் விசாரணை நடத்திய போது அவர் கூறியதாவது, எங்களிடம் வீடு வாங்க வருபவர்களுக்கு போலியான ஆவணங்களை தயார் செய்து அதனை வங்கியில் காண்பித்து கடன் பெற்று அதனை திரும்ப செலுத்தாமல் ஏமாற்றி வந்ததை ஒப்புக்கொண்டார்.
இதுவரை ஏறக்குறைய 73 லட்சத்திற்கும் மேல் மோசடி செய்தது தெரியவந்தது. எனவே அவரை கைது செய்த போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.