சமூக ஊடகங்களில் தற்போது பரவிவரும் ஒரு வீடியோவில், ஒரு சிறு குழந்தையின் கைகளை பாம்பு ஒன்று இறுக்கமாக சுற்றி இருப்பது காணப்படுகிறது. குழந்தை தன்னை விடுவித்துக்கொள்ள முயற்சிக்கும்போது, அருகில் மற்றொரு குழந்தை மற்றும் பெரியவர்கள் இருந்தும் யாரும் அந்த பாப்பாவுக்கு உதவவில்லை. இந்தக் காட்சியை வீடியோவாக படம் பிடித்ததோடு, சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருக்கிறார்கள். இந்த வீடியோவை @vivek_choudhary_snake_saver என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில்  பகிர்ந்துள்ளனர்

இந்த வீடியோவில் குழந்தை அவஸ்தைப்படும் தருணத்தில் குடும்பத்தினர் சாதாரணமாக பார்த்துக் கொண்டிருப்பது நெட்டிசன்களுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற வீடியோக்களை சுவாரசியக்காக படமாக்குவது தவறு என பலர் கருத்து தெரிவித்துள்ளனர். குறிப்பாக, இது விஷமற்ற பாம்பு என்றாலும், குழந்தையின் பாதுகாப்பை அலட்சியமாக எடுத்துக் கொண்டது என்பதே சமூக வலைதளங்களில் பரவலாக உள்ள விமர்சனமாக இருக்கிறது.

வீடியோவை பதிவிட்ட விவேக் சவுத்ரி, இது விஷமற்ற “எலி பாம்பு” (rat snake) எனவும், பீதி அடையத் தேவையில்லை எனவும் விளக்கம் அளித்திருந்தார். ஆனால் பலர், “விஷமற்ற பாம்பா இருந்தாலும், ஒரு குழந்தையின் அருகே பாம்பை வைத்தது தப்புதான்” என கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் “இதைப் பார்த்த பிறகு மற்ற குழந்தைகள் பாம்புகளுடன் விளையாட முயற்சித்தால் யார் பொறுப்பு?” என்றும், “பெரியவர்கள் தான் புத்திசாலித்தனமாக நடந்து கொள்ள வேண்டும்” என்றும் விமர்சனம் எழுந்துள்ளது.