
அரியானா மாநிலம் ஹைசர் மாவட்டம் பாஸ் கிராமத்தில் உள்ள தனியார் மேல்நிலை பள்ளி ஒன்றில் நடந்த கொடூர சம்பவம், பள்ளி நிர்வாகம் மற்றும் பெற்றோர்களிடம் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பள்ளியின் செயலாளராக பணியாற்றி வந்தவர் ஜக்பீர் சிங் பானு (வயது 55). பள்ளியின் ஒழுங்குமுறைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தி வந்த இவர், மாணவர்கள் சீருடை மற்றும் தலையழகு குறித்து ஒழுங்கு முறையை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், அந்த பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயின்றுவரும் இரு மாணவர்கள், முடி வெட்டாமலே பள்ளிக்கு வந்ததைக் கண்டித்து, ஜக்பீர் சிங் நேற்று மதியம் பள்ளி வளாகத்தில் அவர்களை கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரம் கொண்ட அந்த இரு மாணவர்கள், தாங்கள் பள்ளிக்கு மறைவாகக் கொண்டுவந்த கத்தியை எடுத்துக்கொண்டு, செயலாளர் ஜக்பீர் சிங்கை பலமுறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலை செய்த இரு மாணவர்களையும் பிடிக்க தீவிர ரீதியில் தேடி வருகின்றனர். பள்ளியில் ஒழுங்குமுறை நிலைநாட்ட முயன்ற ஒரு செயலாளர் மாணவர்களிடமிருந்து இவ்வாறு கொடூர தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
மாணவர்களின் மனநிலை, பள்ளி ஒழுங்குமுறை, பெற்றோர் பங்கு குறித்து சமூக வலைதளங்களிலும் பரபரப்பான விவாதங்கள் எழுந்துள்ளன.