உத்தர பிரதேஷ் மாநிலம் பிரதாப்கர் கோட்வாலி தேஹாட்டின் பதோஹி பகுதியை சேர்ந்தவர்கள் ராம்பரன் – சுனிதா தம்பதிக்கு சந்திப் என்ற மகன் இருக்கிறார். 2022 ஆம் வருடம் நவம்பர் மாதம் சந்திப்பிற்கு பெற்றோர் துர்க்கேஸ்வரி என்ற பெண்ணை திருமணம் செய்து வைத்தனர். 2023 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் துர்க்கேஸ்வரிக்கு ஒரு ஆண், இரண்டு பெண் என மூன்று குழந்தைகள் பிறந்தது.

குழந்தைகளுடன் துர்கேஸ்வரி நீண்ட நாட்கள் தனது தாய் வீட்டில் தான் இருந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்பு துருக்கேஸ்வரி தனது கணவரின் வீட்டிற்கு குழந்தைகளுடன் திரும்பியுள்ளார். ஆனால் துர்கேஸ்வரியின் கணவர் எப்போதும் அவரை கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் தனது குழந்தைகள் மற்றும் மாமியாருடன் மகிழ்ச்சியாக இருக்க நினைத்தார் துர்கேஸ்வரி. அதன்படி மாமியார் சுனிதா குழந்தைகளை பார்த்துக் கொள்ள துர்கேஸ்வரியும் மகிழ்ச்சியாக தான் இருந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மது போதையில் வந்த சந்திப்பு மனைவி துர்க்கேஸ்வரி மற்றும் தாய் சுனிதாவிடம் கடுமையாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டையிட்டுள்ளார்.

இதுதான் அந்த குடும்பத்தின் ஒட்டுமொத்த மகிழ்ச்சியையும் நிலைகுலைய செய்துள்ளது. சனிக்கிழமை காலை வீட்டிலிருந்த ஒரு அறையில் துர்கேஸ்வரி மற்றும் மூன்று பிஞ்சு குழந்தைகள் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். கணவனின் கொடுமை தாங்காமல் மூன்று குழந்தைகளையும் தூக்கிலிட்டு கொலை செய்துவிட்டு துர்கேஸ்வரி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மருமகளையும் பேரக்குழந்தைகளையும் அந்த நிலையில் பார்த்து ராம்பரன் மற்றும் சுனிதா கதறியது அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இது குறித்த தகவல் அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.