மத்தியப் பிரதேசத்தில் முறையான சாலை வசதி இல்லாததால், ஒரு நோய்வாய்ப்பட்ட பெண்ணை அவரது உறவினர்கள் ஒரு கயிறு கட்டில் சுமந்து கொண்டு மருத்துவமனைக்குச் சென்ற அவலமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. சரியான நேரத்தில் மருத்துவமனைக்குச் செல்ல முடியாததால், அந்தப் பெண் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேலும் தார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவம், நாட்டின் சில பகுதிகளில் இன்னும் நீடிக்கும் அடிப்படை உள்கட்டமைப்பு குறைபாடுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. மரணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணுக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதுதான் இதில் மிகப்பெரிய வேதனை.  ஆம்புலன்ஸ் வர முடியாத அளவுக்கு சாலைகள் மோசமாக இருந்ததால், அவரது சடலத்தையும் அதே கட்டிலில் சுமந்தபடிதான் உறவினர்கள் மீண்டும் வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.

இந்நிலையில் டிஜிட்டல் இந்தியா மற்றும் நவீன முன்னேற்றங்களைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருக்கும் இவ்வேளையில், ஒரு உயிரைக் காக்க ஆம்புலன்ஸ் கூட வர முடியாத நிலையில் மக்கள் இருப்பது சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்ச்சியையும் கண்டனங்களையும் எழுப்பியுள்ளது.