
தற்போது நடந்து முடிந்துள்ள ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன் அணியை முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் அறிவித்துள்ளார்..
ஐபிஎல் 16வது சீசனில், குஜராத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியுடன் தொடரை தொடங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ். பந்துவீச்சில் போதிய பலம் இல்லாத சென்னை அணி இம்முறை பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற முடியாது என்பது பல கிரிக்கெட் நிபுணர்களின் கருத்தாக இருந்தது. ஆனால் இரண்டாவது அணியாக பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை அணி, முதல் அணியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி குஜராத் அணியை எதிர்கொண்டது.ஆனால் வழக்கம் போல் பந்துவீச்சு, பீல்டிங் பிரச்சனைகள் இருந்தாலும் ஜடேஜா, கான்வே, கெய்க்வாட் போன்ற வீரர்களின் தன்னம்பிக்கை பேட்டிங்கால் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த மிரட்டல் தான் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போதைய ஹாட் டாபிக் என்பதால், சென்னை அணியின் வெற்றி குறித்து முன்னாள், தற்போதைய வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதேபோல், சில முன்னாள் வீரர்களும் தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடருக்கான சிறந்த விளையாடும் லெவன் அணியை அறிவித்து வருகின்றனர்.
இதேபோல், முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேகரும் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் தொடருக்கான சிறந்த ஆடும் லெவன் அணியை அறிவித்துள்ளார்.தனது அணியின் கேப்டனாக டு பிளெசிஸை தேர்வு செய்துள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர், தனது அணியின் பேட்ஸ்மேன்களாக சுப்மான் கில், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
விக்கெட் கீப்பராக ஜிதேஷ் ஷர்மாவையும், பினிஷராக ரிங்கு சிங்கையும், ஸ்பின் பவுலர்களாக ரஷித் கான் மற்றும் வருண் சக்ரவர்த்தியையும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ளார். அதேபோல் வேகப்பந்து வீச்சாளர்கள் வரிசையில் முகமது ஷமி, முகமது சிராஜ், ஆகாஷ் மத்வால் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தேர்வு செய்துள்ள 11 வீரர்களில் ஒருவர் கூட கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது..
சஞ்சய் மஞ்ச்ரேக்கரின் ராக்கிங் XI ;
டு பிளெசிஸ் (கே), சுப்மன் கில், சூர்யகுமார் யாதவ், கேமரூன் கிரீன், ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், ரஷித் கான், வருண் சக்ரவர்த்தி, முகமது ஷமி, முகமது சிராஜ், ஆகாஷ் மத்வால்.