19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மார்ச் 28-ந்தேதி தொடங்கி மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற உள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோத உள்ளன. இதற்காக அனைத்து அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வரும் நிலையில், பெங்களூரு அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் காயம் காரணமாக இந்தத் தொடரில் பங்கேற்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கனவே காயம் காரணமாக ஆஷஸ் மற்றும் டி20 உலகக்கோப்பை தொடர்களில் விளையாடாத ஹேசில்வுட், தற்போது ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.

அவர் ஐ.பி.எல் தொடரில் விளையாட வேண்டுமானால், அந்நாட்டு மருத்துவக் குழுவிடம் இருந்து முறையாக உடற்தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். ஒருவேளை அவருக்கு அனுமதி கிடைக்காவிட்டால், அது பெங்களூரு அணியின் பந்துவீச்சு பலத்தை வெகுவாகப் பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.