மும்பை அருகே உள்ள பயந்தர் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பண்டிட் பீம்சென் ஜோஷி அரசு மருத்துவமனையில், நிர்வாகத்தின் அலட்சியத்தால் 89 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுஹாசினி மாதகர் என்ற அந்த மூதாட்டி, கடந்த மார்ச் 12-ம் தேதி சிகிச்சைக்காக ஐசியூ வார்டில் அனுமதிக்கப்பட்டு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஐசியூ வார்டுக்குள் புகுந்த எலிகள், அந்தப் பாட்டியின் கையை ஆக்ரோஷமாகக் கடித்துக் குதறியுள்ளன. திங்கட்கிழமை காலை 6 மணியளவில் உறவினர்கள் பார்க்கச் சென்றபோது, பாட்டியின் கை ரத்த வெள்ளத்தில் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

​”மருத்துவமனை ஊழியர்களின் கவனக்குறைவே எனது தாயின் மரணத்திற்கு காரணம்” என அவரது மகன் மிலிந்த் மாதகர் குற்றம் சாட்டியுள்ளார். எலிகள் கையின் நரம்பைக் கடித்ததால் அதிகப்படியான ரத்தப்போக்கு ஏற்பட்டு, சிகிச்சை பலனின்றி அந்த மூதாட்டி உயிரிழந்துள்ளார். அதிதீவிர சிகிச்சைப் பிரிவு (ICU) போன்ற பாதுகாக்கப்பட்ட இடத்திலேயே எலிகள் தடையின்றி நடமாடுவதும், நோயாளி கடிக்கப்படுவதைக் கூட அங்குள்ள மருத்துவர்களும் செவிலியர்களும் கவனிக்காமல் இருந்ததும் பொதுமக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.