உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உள்ள பிட்டூர் பகுதியில், தனியார் மருத்துவமனையின் அலட்சியத்தால் பிறந்த சில மணி நேரத்திலேயே பெண் குழந்தை ஒன்று வார்மர் மெஷினில் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிட்டூர் பகுதியைச் சேர்ந்த அருண் நிஷாத் என்பவரின் மனைவி ஷாலு, அங்குள்ள ராஜா நர்சிங் ஹோமில் ஞாயிற்றுக்கிழமை மாலை ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். பிறந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்த நிலையில், குளிரிலிருந்து பாதுகாக்க நர்சுகள் குழந்தையை ஐ.சி.யு-வில் (ICU) உள்ள வார்மர் மெஷினில் வைத்தனர்.
ஆனால், மெஷினை ஆன் செய்த ஊழியர்கள், அதன் வெப்பநிலையைக் கண்காணிக்கத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதனால் மெஷினில் வெப்பம் அதீதமாக உயர்ந்ததில், குழந்தையின் உடல் கருகி கருப்பு நிறமாக மாறியது. இந்த கோரமான விபத்தில் அந்த பிஞ்சு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
குழந்தையைப் பார்க்க அனுமதி மறுக்கப்பட்டதால் சந்தேகமடைந்த உறவினர்கள், வலுக்கட்டாயமாக ஐ.சி.யு-வுக்குள் நுழைந்தனர். அங்கு குழந்தையின் தலை மற்றும் கைகள் தீயால் கருகியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை மோசமாவதைக் கண்ட டாக்டர் விவேக் மிஸ்ரா மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.
தகவலறிந்து வந்த போலீசார் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து துணை போலீஸ் கமிஷனர் (DCP) எஸ்.எம். காசிம் ஆபிதி கூறுகையில்: குழந்தையின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனையின் ஐ.சி.யு (ICU) சீல் வைக்கப்பட்டுள்ளது. குடும்பத்தினர் அளிக்கும் புகாரின் அடிப்படையில் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
மருத்துவமனை நிர்வாகம் இதனை ஒரு ‘விபத்து’ என்று கூறி தப்பிக்க முயன்றாலும், குடும்பத்தினர் இதனை ‘கிரிமினல் குற்றம்’ எனச் சாடியுள்ளனர். மேலும் அருண் – ஷாலு தம்பதிக்கு இது முதல் குழந்தை என்பதால் குடும்பமே மகிழ்ச்சியில் இருந்தது. ஆனால், சில மணி நேரத்திலேயே அந்த மகிழ்ச்சி சோகமாக மாறியது. குழந்தையின் தாய் ஷாலுவிடம் இன்னும் இந்தத் துயரச் செய்தி தெரிவிக்கப்படவில்லை. சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும், மருத்துவமனையின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
