தமிழகத்தின் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியதற்காக தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே போதை பொருட்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தானியங்கி இயந்திரத்தின் மூலம் மதுவை விற்பனை செய்வதா.? திமுக ஆட்சி கடந்த 2 வருடங்களாக மக்கள் நலனுக்காக செயல்படுவதற்கு பதில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் நலனை சீரழிக்கும் விதமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் தமிழகத்தை போதைப்பொருட்களின் கேந்திரமாகவே மாற்றி விட்டார்கள்.

இதனால் கொலை, கொள்ளை மற்றும் பாலியல் வன்கொடுமைகள் போன்ற குற்றங்கள் பெருகி வருவதை ஏற்கனவே சட்டமன்றத்திலும் ஊடகத்தின் வாயிலாகவும் சுட்டிக்காட்டி உள்ளேன். மதுபான கடைகளில் மாணவர்களுக்கும், 21 வயது குறைந்தவர்களுக்கும் மதுபானம் விற்கக் கூடாது என்ற குரல் ஓங்கி ஒலிக்கும் நிலையில், இளைஞர்களை சீரழிக்கும் வகையில் தானியங்கி மது வழங்கும் இயந்திரத்தை அறிமுகப்படுத்தியது கடும் கண்டனத்திற்குரியது. தமிழகம் முழுவதும் இது போன்ற 500 இயந்திரங்கள் பல்வேறு இடங்களில் பொருத்தப்படும் என்று வெளிவந்துள்ள செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தானியங்கி எந்திரம் மூலம் மது விற்பனை செய்யும் நடவடிக்கையை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என அறிக்கையில் எடப்பாடி பழனிச்சாமி குறிப்பிட்டுள்ளார்.