
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமானது(இஸ்ரோ) பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி., எஸ்.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து ஆந்திரா ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்திலிருந்து அவற்றில் செயற்கைகோள்களை பொருத்தி விண்ணில் ஏவி வருகிறது. அந்த அடிப்படையில் அதிக எடையை தாங்கி செல்லும் ஜி.எஸ்.எல்.வி ரகத்தில் தயாரிக்கப்பட்ட மற்றொரு ராக்கெட்டான “எல்.வி.எம்-3” ராக்கெட்டை இஸ்ரோ வடிவமைத்துள்ளது. எல்விஎம்-3 இஸ்ரோவின் அதிக எடையுடைய ராக்கெட் ஆகும்.
இந்த ராக்கெட்டை ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருக்கும் 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை காலை 9 மணிக்கு விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த ராக்கெட்டில் ஒன்வெப் இந்தியா-2க்கான 36 செயற்கைகோள்கள் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்நிலையில் ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்குரிய 24 மணிநேர கவுண்டவுன் இன்று காலை தொடங்கியுள்ளது.