
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் தீவிரமாகும் நிலையில், நாட்டின் பாதுகாப்பு பணிக்காக பிராந்திய ராணுவத்தையும் செயலில் ஈடுபடுத்த பாதுகாப்பு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய, ராணுவத் தளபதிக்கு அனைத்து பிராந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்களையும் சீரான ராணுவத்திற்கு ஆதரவாக பணியில் அழைக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பிராந்திய ராணுவம் என்பது நாடு முழுவதும் இயற்கை பேரழிவுகள், அவசரக் கடமைகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு பணிகளில் ராணுவத்திற்கு துணைபுரியும் ஒரு தன்னார்வ ராணுவம். 18 முதல் 42 வயதுக்குள் உடல், மன தகுதி உடைய பட்டதாரிகள் இதில் லெப்டினன்ட் அதிகாரியாக சேர முடியும். நிரந்தர பணியல்ல, தேவைப்படும்போது சேவைக்கு அழைக்கப்படும் தன்மை கொண்டது. பணியாற்றும் நேரத்தில் சம்பளம், பயிற்சி, கட்டுப்பாடுகள் அனைத்தும் வழக்கமான ராணுவத்துடன் இணையாகவே அமையும்.
1948 ஆம் ஆண்டு பிராந்திய ராணுவ விதிகளின் விதி 33ன் கீழ், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள 32 பிராந்திய ராணுவ காலாட்படை பட்டாலியன்களில், 14 பட்டாலியன்கள் இந்தியாவின் முக்கிய ராணுவ கட்டளைகளில் தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய, வடக்கு, தென்மேற்கு, அந்தமான் மற்றும் நிக்கோபார், இராணுவ பயிற்சி கட்டளை (ARTRAC) – உள்ளிட்ட பகுதிகளில் பணியமர்த்தப்பட உள்ளன.
பணியமர்த்தல் செலவு பாதுகாப்பு அமைச்சகத்தின் பட்ஜெட்டில் இருந்து மறு ஒதுக்கீடாக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி மற்றும் ராஜஸ்தான் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் ஆகியோர் தற்போது பிராந்திய ராணுவத்தில் செயலில் உள்ளனர்.
தோனி 2011ல் லெப்டினன்ட் கர்னலாக நியமிக்கப்பட்டதுடன், பாராசூட் ரெஜிமென்ட்டில் பயிற்சி பெற்று தகுதிவாய்ந்த பாராசூட் வீரராக உள்ளார். சச்சின் பைலட் 2012ல் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவர்களுடன் அனுராக் தாக்கூர், கபில் தேவ் உள்ளிட்டோர் பிராந்திய ராணுவத்தில் பணியாற்றியுள்ளனர். தற்போதைய சூழலில் இவர்களும் நாட்டுக்காக மீண்டும் சேவையில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.