இன்ஸ்டாகிராமில் வெளியான ஒரு காணொளியில், ஒரு நபர் வெங்காயத்தை வெட்டி வைத்துவிட்டு, இருவரை அதை சுவைத்துப் பார்க்கச் சொல்கிறார். ஒருவர் “காரமாக இருக்கிறது” என்று கூற, மற்றொருவர் “இனிப்பாக இருக்கிறது” என்கிறார். ஆனால், உண்மையில் அவர் வெட்டியது ஒரே வெங்காயம்தான். இதைக் கேட்டு இருவரும் அதிர்ச்சியடைகின்றனர். பின்னர், அந்த நபர் இதற்குப் பின்னால் உள்ள காரணத்தை விளக்குகிறார். இந்தக் காணொளி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

வெங்காயத்தில் உள்ள சல்பர் தான் அதன் சுவையை மாற்றுகிறது என்று அவர் விளக்குகிறார். வெங்காயத்தை நேராக வெட்டும்போது, செல்கள் குறைவாக பாதிக்கப்பட்டு, சல்பர் சிறிதளவே வெளியாகிறது, இதனால் இனிப்பு சுவை கிடைக்கிறது. ஆனால், வெங்காயத்தை வட்டமாக, அதாவது குறுக்காக வெட்டும்போது, செல்கள் அதிகம் சேதமடைந்து, சல்பர் அதிகளவு வெளியாகி காரமான சுவையைத் தருகிறது. இந்த எளிய விளக்கம், வெங்காயத்தை வெவ்வேறு விதமாக வெட்டுவதால் சுவை மாறுவதை தெளிவாகக் காட்டுகிறது. இந்தக் காணொளி, அறிவியல் தகவலுடன் பயனுள்ளதாக இருப்பதால், பலரும் பகிர்ந்து வருகின்றனர்.