தமிழகத்தின் 12-ஆவது முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் ஜோசப் விஜய், தனது முதல் தேர்தலிலேயே முத்திரை பதித்து ஆட்சியைப் பிடித்துள்ளார். தற்போது ஒருபுறம் ஆட்சி நிர்வாகத்தைக் கவனித்துக் கொண்டே, மறுபுறம் கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார். மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். தனது அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எப்படித் தேசிய அளவில் கொண்டு சென்றாரோ, அதே பாணியைத் தற்போதைய முதல்வர் விஜய்யும் கையில் எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 1953-ஆம் ஆண்டு திமுக-வில் இணைந்த எம்.ஜி.ஆர்., பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் 1972-இல் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். உடனடியாக அக்டோபர் 17-ஆம் தேதி அஇஅதிமுக-வைத் தொடங்கிய அவர், அடுத்த 5 ஆண்டுகளில் (1977 ஜூன்) நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் 142 இடங்களைக் கைப்பற்றி, தான் சந்தித்த முதல் தேர்தலிலேயே ஆட்சிக் கட்டிலில் அமர்ந்து சாதனை படைத்தார்.
எம்.ஜி.ஆரைப் போலவே திரைத்துறையில் இருந்து வந்து முதல் தேர்தலிலேயே அரியணை ஏறியுள்ள முதல்வர் விஜய், தவெக-வை வெறும் தமிழகத்தோடு மட்டும் சுருக்கிக் கொள்ளாமல், இந்திய அளவில் ஒரு முக்கிய தேசியச் சக்தியாக மாற்ற விரும்புகிறார். ஏற்கனவே கேரளா, கர்நாடகா, ஆந்திரா மற்றும் புதுச்சேரி ஆகிய அண்டை மாநிலங்களில் ‘விஜய் மக்கள் இயக்கம்’ மிக வலுவான உள்கட்டமைப்புடன் செயல்பட்டு வருகிறது. அங்கு விஜய்க்குப் பெருமளவிலான ரசிகர்களும், ஆதரவாளர்களும் உள்ளனர்.
எனவே, அந்தந்த மாநிலங்களில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தை அப்படியே தவெக-வின் அதிகாரப்பூர்வ மாநிலக் கிளைகளாக மாற்ற முதல்வர் விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன் மூலம் பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மக்கள் மற்றும் ரசிகர்களின் வாக்கு வங்கியை ஒருங்கிணைத்து, வருங்காலத்தில் அங்கு நடைபெறும் தேர்தல்களிலும் தவெக-வை களம் இறக்கப் பூர்வாங்கப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
