
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் டாக்டர் சுனில் குமார். இவரிடம் கடந்த 17ஆம் தேதி ஒரு பெண் வாட்ஸ் அப் மூலமாக தன்னுடைய மாமியாரை கொலை செய்ய இரண்டு மாத்திரைகளை கேட்டுள்ளார். அந்த மெசேஜை பார்த்து டாக்டர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உயிரை காப்பாற்றுவது தான் மருத்துவர்களின் வேலை உயிரை பறிப்பது கிடையாது என்று கூறியுள்ளார். இருப்பினும் அந்தப் பெண் விடாது தன் மாமியாரின் உயிரை பறிக்க இரண்டு மாத்திரைகளின் பெயரை மட்டும் கூறுமாறு கெஞ்சியுள்ளார். அந்த டாக்டர் எவ்வளவோ எடுத்துக் கூறியும் அந்த பெண் கேட்கவில்லை.
இறுதியாக அந்தப் பெண் தன்னுடைய செயலுக்காக மன்னிப்பு கேட்டதோடு இது பற்றி தயவு செய்து புகார் மட்டும் கொடுத்து விடாதீர்கள் என்று கேட்டுள்ளார். அதாவது தன்னுடைய மாமியார் தொடர்ந்து தன்னை துன்புறுத்துவதாகவும் அவருடைய டார்ச்சர் தாங்க முடியாததால் அவரை கொலை செய்துவிட்டால் நிம்மதியாக இருக்கலாம் என்பதாலும் மாத்திரைகளை கேட்டதாக அந்த பெண் கூறியுள்ளார். இருப்பினும் டாக்டர் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். மேலும் அந்த புகாரின் படி காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.