பிரபல யூடியூபரும் நடிகருமான ‘எருமை சாணி’ விஜய், கடந்த சில நாட்களாகத் தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் தானும் தனது குடும்பமும் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
நடிகை அனுக்ரஹா என்பவர் சமூக வலைதளங்களில் விஜய் மீது முன்வைத்த புகார்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவை அனைத்தும் ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகள் என விஜய் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
முறையான விசாரணை ஏதுமின்றி பலர் இந்தத் தகவலைப் பரப்பியதால், கடந்த 10 ஆண்டுகளாக தான் கஷ்டப்பட்டு உருவாக்கிய பெயரும் புகழும் சில நாட்களிலேயே சிதைக்கப்பட்டுவிட்டதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, இந்த விவகாரத்தில் தனது மனைவி நக்ஷத்ராவை இழுத்து அவமானப்படுத்தியது தமக்கு ஆறாத வடுவை ஏற்படுத்தியுள்ளதாகவும், அவர் தற்போது கடும் மன அழுத்தத்தில் இருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது புகாரளித்த நபர் வீடியோக்களை நீக்கிவிட்டு தலைமறைவாகிவிட்டாலும், அதன் மூலம் ஏற்பட்ட வடு மாறாது என்றும், உண்மையை அறியாமல் தன்னை விமர்சித்தவர்கள் இப்போது மன்னிப்பு கேட்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஆதாரங்கள் இன்றி அவதூறு பரப்புவோர் மீது ஏற்கனவே நீதிமன்றம் மூலம் சட்டப்படியான நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டதாகவும், விரைவில் உண்மை நிரூபிக்கப்படும் என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்துள்ளார்.
“கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்” என்ற பழமொழியைச் சுட்டிக்காட்டிய விஜய், தனக்கு ஆதரவாக நின்றவர்களுக்குத் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டுள்ளார். ஒருவரின் வாழ்க்கையைச் சிதைத்து அதன் மூலம் சமூக வலைதளங்களில் பாலோயர்களைப் பெறுவது மிகவும் மோசமான செயல் என அவர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
