கர்நாடக மாநிலத்தின் தர்மஸ்தலா கிராமத்தை சேர்ந்த முன்னாள் சுகாதார ஊழியர் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் சுகாதார ஊழியராக வேலை பார்த்த காலத்தில் சில கொலைகளை நேரில் கண்டதாகவும், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் உடல்களை புதைத்ததாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த புகாரை கேட்ட காவல்துறையினர் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் சுகாதார ஊழியரான அந்த நபர் காவல் துறையினருக்கு கடிதம் ஒன்று எழுதியிருக்கிறார். அந்த கடிதத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு தான் பல உடல்களை புதைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.

இந்த கடிதத்தின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தியபோது சில உண்மைகள் தெரியவந்தது. சுகாதார ஊழியரான அந்த நபர் 1995 ஆம் ஆண்டு முதல் 2014ஆம் ஆண்டு வரை தர்மஸ்தளம் என்ற கிராமத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கிராமத்தில் உள்ள இளம் பெண்கள் சிலர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதாகவும் அந்த கொலைகளை தான் நேரில் பார்த்ததாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

கொலை செய்யப்பட்ட இளம்பெண்கள் முற்றிலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு பின்பு கொலை செய்யப்பட்டனர். அந்த இளம்பெண்கள் கொலை செய்யப்பட்டதை பார்ப்பதற்கு மிகவும் கஷ்டமாக இருந்தாலும் நானே அவர்களின் உடல்களை புதைக்கும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருந்தேன்.

ஆனால் நான் 1998 ஆம் ஆண்டு கொலை செய்யப்பட்ட பெண்களின் உடல்களை புதைக்க மறுப்பு தெரிவித்ததால் அங்கிருந்தவர்கள் என்னை அடித்து கொலை செய்து விடுவேன் என மிரட்டினர். மேலும் என் குடும்பத்தினரையும்‌ கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதனால் பயந்து போய் சில உடல்களை டீசல் ஊற்றி எரித்தும், மற்ற உடல்களை அந்த கிராமத்தில் உள்ள பல இடங்களில் புதைத்ததாகவும் கடிதத்தில் எழுதியிருந்தார்.

கடந்த 2014-ம் ஆண்டு நானும் எனது குடும்பத்தினரும் வேறொரு மாநிலத்துக்கு சென்று விட்டோம். ஆனால் நான் புதைத்த பெண்களின் இறப்பிற்கு நானும் உடந்தையாக இருந்த காரணத்தால் என்னால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. எனவே இந்த கடிதத்தின் மூலம் அனைத்து உண்மைகளையும் கூறுவதாக தெரிவித்து இருந்தார்.

மேலும் காவல்துறையினரான நீங்கள் எனக்கும் என்னுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு அளித்தால் அந்த இளம் பெண்களை கொன்றவர்கள் யார் என்பது குறித்து அடையாளங்களை கூறுவேன் என உறுதியளித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இளம் பெண்கள் புதைக்கப்பட்ட இடத்திற்கு நேரில் சென்ற அந்த நபர் சில உடல்களை தோண்டி எடுத்து எலும்புகளை காவல்துறையினருக்கு ஆதாரமாக அனுப்பியுள்ளார்.

எனவே புதைக்கப்பட்ட இடங்களில் இருந்து உடல்களை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் அனுமதி அளித்தால் காவல்துறையினரான நாங்கள் விசாரணை நடத்தி தக்க தண்டனை பெற்றுத் தருவோம் என உறுதி அளித்துள்ளனர். இந்த சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.